வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீதம் ஊதிய உயர்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்து உள்ளன. இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சேர்த்து புதிய ஊதிய நிர்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் யூனியனும் ஒப்புக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல் கல்லாகும்.
வங்கி அதிகாரிகள், பணியாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பர் 1-ந்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் ஆண்டுதோறும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளர்கள் பலனடைவர்.