Tamilசெய்திகள்

பொங்கள் பண்டிகையொட்டி அதிகரித்த டாஸ்மாக் மதுபான விற்பனை!

பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10 சதவிகிதம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் 5600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 300 கடைகள் உள்ளன. போகிப்பொங்கல் தினமான 14-ந்தேதி மற்றும் காணும் பொங்கலான 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. 15-ந்தேதி பொங்கல் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இது இதுவரையில் இல்லாத விற்பனை ஆகும். காணும் பொங்கல் தினத்தில் ரூ.175 கோடிக்கும், போகி பண்டிகை அன்று ரூ.180 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது வார இறுதியில் நடைபெறும் விற்பனையை விட அதிகமாகும். வார இறுதியில் சராசரியாக ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரை விற்பனை ஆகும். அதை விட போகி மற்றும் காணும் பொங்கலில் விற்பனை நடந்துள்ளது.

திருச்சி மற்றும் மதுரை மண்டலத்தில் மட்டும் இந்த 3 நாட்களில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் ரூ.105 கோடிக்கு இந்த கால கட்டத்தில் மது விற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் மது விற்பனை குறைந்ததற்கு காரணம் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் செய்ததே ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை விடுமுறையில் 16-ந்தேதி திருவள்ளுவர் தினமும் சேருகிறது. அன்றைய தினம் மது விற்பனை கிடையாது. ஆனாலும் இந்த அளவிற்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை அக்டோபர் 25 மற்றும் 27-ந்தேதியில் ரூ.455 கோடி மதுவிற்பனை நடந்துள்ளது. இதைவிட பொங்கலில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *