Tamilசெய்திகள்

பொங்கல் பரிசு வழங்கம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிவைக்கிறார். டோக்கன் முறையில் அன்றைய தினமே ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.