X

பொங்கல் பரிசு! – தமிழகத்தை பார்த்து ஏங்கும் புதுச்சேரி மக்கள்

இலவசம், சலுகை என்றாலே புதுச்சேரி மாநிலம் தான் என்ற பெருமை ஒரு காலத்தில் இருந்தது. உயர்கல்வி கட்டணம், மழை நிவாரணம், கல்வி உதவித்தொகை என்றால் அள்ளிக்கொடுக்கும் மாநிலமாக புதுச்சேரி இருந்து வந்தது.

இதனால் புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்கள் புதுச்சேரியில் குடியேறுவதை லட்சியமாக கொண்டிருந்தனர். இங்கு குடியேறாவிட்டாலும் தங்களது உறவினர்கள் வீடுகளின் விலாசங்களை கொடுத்து ரேஷன்கார்டுகளை வாங்கி சலுகைகளை அனுபவித்து வந்தனர்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அள்ளிக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. மருந்துக்குகூட கிள்ளிக்கொடுக்காத நிலை புதுச்சேரியில் நிலவுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் ரொக்கப்பணம் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதேபோல் புதுவையிலும் ரூ.1000 வழங்க கோப்புகளை தயாரிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களினால் அதில் சிக்கல் ஏற்பட் டது. பொங்கல் பொருட் களுக்கு பதிலாக ரூ.170 பணம் வழங்க எந்த சிக்கலும் இல்லை என்று தெரிகிறது.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், பொங்கல் பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. புதுவை எல்லையில் தமிழக பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் இதைப்பார்த்து எங்களுக்கு எதுவும் இல்லையே என்று ஏங்கி வருகின்றனர்.

எனவே புதுவை மக்களின் ஏக்கத்தை தீர்க்க எந்த வழி யிலாவது ரொக்கப்பணம் கொடுக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக 2 மாதத்திற்கு இலவச அரிசிக்கான ரொக்கத்தொகையாக சிவப்பு கார்டுகளுக்கு தலா ரூ.1,200-ம், மஞ்சள் கார்டு களுக்கு ரூ.600-ம், ஆதிதிராவிட மக்களுக்கு 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500-ம், மற்ற சமூகத்தினருக்கு இலவச துணிக்கான தொகை ரேஷன்கார்டு ஒன்றுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான கோப்புகளை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு வழங்க ஒப்புதல் கிடைக்குமா? போதிய நிதி ஆதாரம் உள்ளதா? என்பது தெரியவில்லை. கடந்த காலங்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தமிழகம் அளவுக்கு புதுச்சேரி மக்களுக்கு இலவசங்கள் கிடைக்கவில்லை. எனவே இந்த பொங்கல் பண்டிகைக்காவது அவை கிடைக்குமா? என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்துள்ளது.

Tags: south news