பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. வருகிற பொங்கல் பண்டிகைக்கும் கடந்த ஆண்டை போல ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு வெல்லத்தைச் சேர்க்க உத்தரவிடக்கோரி விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் கூறுகையில்,
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டை அணுகியிருக்கிறோம். கடந்த ஆண்டு இந்த கோரிக்கைக்காக நீதிமன்றத்தை நாடினோம். அப்போது வழக்கை பரிசீலிக்க அரசுக்கு போதிய அவகாசம் அளித்து முன்கூட்டியே மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி நாங்கள் தற்போது ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வெல்லம் கொள்முதல் செய்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கி, நடப்பாண்டில் விவசாயிகளின் பொங்கல் பண்டிகையை இனிமையாக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் இடைத்தரகர்கள் பிரச்சனையை தவிர்க்க கொள்முதல் செய்யப்படும் வெல்லத்துக்கு உண்டான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.