Tamilசெய்திகள்

பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு முடிவு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவற்றுடன் ரூ.100 ரொக்கமும் சேர்த்து வழங்கினார்.

கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அதே போல் இந்த வருடமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்பு துண்டு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சுமார் 2 கோடி பேர் பொங்கல் பரிசு திட்டத்தால் பயன் அடைகிறார்கள்.

பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நாளை (29 -ந் தேதி) தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்த வருடம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் முன் கூட்டியே தொடங்கி வைக்கப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னதாக பொங்கல் தொகுப்பு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ஒரு வாரம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு இத்திட்டம் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகளை முன்னதாக வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.

டிசம்பர் மாதத்திற்குள்ளாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகிறது. ஏலக்காய், திராட்சை, முந்திரி ஆகியவற்றை கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை பாக்கெட்டுகளில் அடைக்க வேண்டும். இது தவிர கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்.

கரும்பு டிசம்பர் மாதம் இறுதி மற்றும் ஜனவரியில்தான் அதிகமாக கிடைக்கும். பொங்கல் தொகுப்புடன் கரும்பு கட்டாயம் வழங்க வேண்டும் என்பதால் எப்போது வழங்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

டிசம்பர் மாத இறுதிக்குள் பொங்கல் தொகுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை தனியாகவும், ரொக்க பணம் ரூ.1000 தனியாகவும் கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் பொங்கல் தொகுப்பு மூலம் மக்களுக்கு ரூ.1000 வழங்கி பொதுமக்களை கவரவும் ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதனால் தேர்தலுக்கு முன்னதாக பொங்கல் பரிசு ரூ.1000 கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *