X

பொங்கல் பண்டிகையின் போது நேரில் சந்திப்பதை தவிர்க்கவும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள பொங்கல் வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துக்களை உடன் பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கிறேன்.

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு.

நிலமகள் நெற்சலங்கைக் கட்டி ‘‘தை…தை…தை’’ எனக் குலுங்கி ஆடுகிற தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தி.மு.க. அரசு, முழுக்கரும்புடன் பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பல லட்சக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி இருக்கிறது.

ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் பொது மக்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. அது அவர்களின் இதயத்தில் இருந்து பொங்கி வழிந்தோடும் மகிழ்ச்சி அல்லவா!

ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்துவதில் நமது அரசு மிகவும் உறுதியுடன் இருக்கிறது.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளையும், தனி மனித இடைவெளியையும் தவறாமல் கடைபிடித்து, முககவசத்தை சரியான முறையில் அணிந்து, பொங்கல் பரிசுகளை வழங்குவதன் வாயிலாக கொரோனா பரவலுக்கு இடம் அளிக்காமல் செய்து, உடன் பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும், அவர்களின் இல்லத்தில் மாறா மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

தமிழர் திருநாளில் உங்களில் ஒருவனான என்னை நீங்கள் இல்லம் தேடி வந்து சந்திப்பது வழக்கம். அது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கும். ஆனால் கொரோனா அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொங்கல் நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக, கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அன்பு கலந்த உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலக புத்தாண்டு நாளில் இதே வேண்டுகோளை, இதே காரணத்திற்காக விடுத்தேன். அதனை ஏற்றுக் கடைபிடித்த உடன்பிறப்புகளின் கட்டுப்பாட்டு உணர்வு கண்டு மெய்சிலிர்த்தேன். தமிழர் திருநாளில் அதனை கடைபிடித்து, கட்டுப்பாடு காத்து, கொரோனா பரவலை தடுப்பதற்கு உறுதியுடன் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதுவே நீங்கள் எனக்குத் தரும் இணையிலா பொங்கல் பரிசாக அமையும்.

மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன் பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன்.

தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ் கூறும் நல் உலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல்- தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.