ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், பஸ் மற்றும் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களும், ரெயில்களும் இயக்கப்படும்.
இதேபோல, தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிடும். அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.