Tamilசெய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 1.5 லட்சம் மக்கள் அரசு விரைவுபேருந்துகளில் முன்பதிவு

பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 15-ந்தேதியில் வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள், ரெயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கலுக்கு முன் 3 நாட்களுக்கு முன்பே பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து செல்லக்கூடிய வழக்கமாக ரெயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரெயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன. ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் இருப்பதால் ஏழை மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 10,749 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,932 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கியது.

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய தென் மாவட்டப் பகுதிகளுக்கும், தேனி, திண்டுக்கல், கும்பகோ ணம், தஞ்சாவூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களுக்கும் பெரும்பாலும் இருக்கைகள் நிரம்பி விட்டன.

13, 14 ஆகிய தேதிகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் அதற்கு முந்தைய 12-ந்தேதிக்கு பயணத்தை மாற்றி வருகின்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 நாட்களுக்கும் சேர்த்து 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சராசரியாக ஒரு நாளுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் முன்பதிவு செய்தனர். பிற நகரங்களில் இருந்தும் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் இருந்து இரவில் இயக்கக் கூடிய 300 விரைவு பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பஸ்களில் ஒரு சில இருக்கைகள் உள்ளன. விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி வருவதால் மற்ற போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் நெரிசலில் பயணிப்பதை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.