X

பைசர் உருவாக்கிய கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைகள் – அங்கீகாரம் கிடைக்குமா?

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.

வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறும்போது, “இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில், வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது” என தெரிவித்தார்.

இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதை அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.