X

பைக் ரேஸை நிறுத்த டாக்டர் ராமதாஸ் யோசனை!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் நடைபெறும் இருசக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்தும் பந்தயங்களைக் கட்டுப்படுத்த முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சென்னை மாநகரத்தின் தீராத வியாதியாக உருவெடுத்துள்ள இரு சக்கர வாகன பந்தயத்தை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமே இல்லாத செயல் அல்ல. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் போலீசார் 3 அம்சத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்த சமூகத் தீமைக்கு முடிவு கட்ட முடியும்.

இருசக்கர வாகன பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வருவதுடன், அதற்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளிலும் தேவையான திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். 650 சி.சி. மற்றும் அதற்கு கூடுதலான திறன்கொண்ட இரு சக்கர வாகனங்களை, தொழில்முறை பந்தய பயன்பாட்டைத்தவிர, பிற பயன்பாடுகளுக்கு தடை செய்ய வேண்டும்.

இருசக்கர வாகன பந்தயங்களில் ஈடுபடுவோரை, அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொது இடங்களில் தினமும் சில மணி நேரங்கள் என ஒரு வாரத்திற்கு பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற நடத்தைத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை போலீசார் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: south news