பேருந்துகளை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம் – போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவிப்பு
அரசின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும் பொது இடங்களில் கூடக்கூடிய எந்த அம்சங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை. பூங்கா, உடற்பயிற்சி கூடம், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை திறக்கப்படவில்லை. பஸ், மின்சார, மெட்ரோ ரெயில் போன்ற பொது போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நோய் தொற்று மீண்டும் அதிகரிக்காமல் தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஆனாலும் பஸ், போக்குவரத்து தொடங்குவது குறித்து அரசு முடிவு எடுப்பதில் தாமதம் காட்டி வருகிறது. பொது போக்குவரத்தை தொடங்கினால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேலும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமா? என ஆலோசிக்கிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொடங்குவது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும். ஆனாலும் பஸ்களை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம்.
சென்னையில் 255 மாநகர பஸ்கள் முன்களப் பணியாளர்களுக்காக இயக்கப்படுகிறது என்றனர்.
மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரையில் 280 மின்சார ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக இந்த சேவை இயக்கப்படுகிறது.
மாநில அரசு அறிவித்தால் மின்சார ரெயில் சேவை தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தற்போது மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மட்டும்தான் பயணம் செய்கிறார்கள் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிப்பில் மெட்ரோ ரெயில் சேவை இடம் பெற்றால் இயக்கப்படும். குறைந்த அளவிலான சேவைகளை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.