பேராவூரணி லாரியில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேரிடம் போலீசார் விசாரணை
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, போலீஸ் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேராவூரணி பகுதிக்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் தனிப்படை போலீசார் பேராவூரணி அருகே பின்னவாசலில் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் பொட்டலங்களாக மடிக்கப்பட்டு இருந்ததை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றி பேராவூரணி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.
மேலும் லாரியில் வந்த 3 பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்களை எங்கு கடத்தி சென்றனர் என விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியதால் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 700 கிலோ இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து நாகை மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் பேராவூரணிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.