Tamilசெய்திகள்

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதா? – திமுக மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி

ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது காங்கிரசில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. இதை வரவேற்றுள்ளது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீவிர முயற்சி எடுத்ததில் தி.மு.க.வுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் எஞ்சி உள்ள 6 பேர் விடுதலைக்காகவும் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது.

பேரறிவாளன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தி.மு.க. மட்டுமின்றி அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்தார். எல்லோரும் அவரது விடுதலையை வரவேற்று கொண்டாடுகிறார்கள்.

கூட்டணி கட்சியாக இருந்தாலும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துவது போல் இந்த நிகழ்வுகள் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பலர் பதவிக்காக அலையும் தலைவர்களே கூட்டணியை உதறிவிட்டு வெளியே வாருங்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தலைவர்கள் அனைவரும் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை கூறும்போது, “இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கொலை வழக்கில் ஈடுபட்டு வெளியே வந்தவரை கொண்டாடுபவர்கள் தங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கொண்டாடுவார்களா?

முன்னாள் பிரதமரை கொன்றவரே 31 ஆண்டுகளில் விடுதலை ஆகலாம் என்றிருக்கும் போது சாமானியர்களை கொன்றால் சில மணி நேரங்களிலேயே கூட வெளியே வர முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கொலை குற்றங்கள் அதிகரிக்கும். இனிவரும் காலங்களில் கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகி விடும். தூக்கு மேடையை முத்தமிட இருந்தவர்களை பாதுகாத்தது சோனியா குடும்பம். அந்த குடும்பத்தை இன்று விடுதலையை கொண்டாடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்” என்றார்.

புதுவை முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறும்போது, “இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைவர்கள் மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் என்ற ரீதியில் நாங்கள் மன்னிக்க மாட்டோம்” என்றார்.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இதை ஆதரிக்கும் திராவிட இயக்கத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா? பயங்கரவாதியை கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் வெளியிட்டுள்ள பதிவில், “பேரறிவாளன் நிரபராதி என்று யாரும் கூறவில்லை. ஒரு குற்றவாளியை வெளியே கொண்டு வர போராடி, வெளியே வந்ததும் கட்டிப்பிடித்து கொண்டாடி ஒரு மாபெரும் தலைவரின் படுகொலை கொண்டாடப்படுவதை ஏற்க முடியவில்லை.

இன்னும் தமிழர்கள் பலர் கொலை வழக்குகளில் சிக்கி ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்து கொண்டாடுவார்களா? கொலை வழக்கில் விடுதலையானவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே பாராட்டுவதை ஏற்க முடியவில்லை.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் இமயா கக்கன் கூறும்போது, “ஒரு தலைவரை கொன்றவர். கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டவர். சட்ட நுணுக்கத்தை பயன்படுத்தி வெளியே வந்திருக்கலாம். அதை கூட தப்பு சொல்லவில்லை. ஆனால் முதல்-அமைச்சரை ஒரு கொலையாளி பார்ப்பதும், சால்வை அணிவித்து கட்டித் தழுவியதும் சகிக்க முடியவில்லை. மக்கள் உணர்வை புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

காங்கிரஸ் செயலாளர் தியாகு கூறும்போது, “பேரறிவாளனை வரவேற்று ஒரு தியாகி போல் தேனீர் விருந்து கொடுப்பது வெட்கக்கேடானது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

கேவலம், ஒரு ராஜ்ய சபா எம்.பி. பதவிக்காக இப்படி இருக்கலாமா? அப்படி ஒரு பதவி தேவையில்லை. திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தொண்டர்களை பேச விடாமல் சமாதான துணியை வாயில் கட்டி போராட்டம் நடத்தியதில் எந்த பலனும் இல்லை என்றார்.

தென்சென்னை மாவட்ட தலைவர் முத்தழகன் கூறும்போது, “ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருவதில் என்ன நியாயம்?

நமது முதல்-அமைச்சர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்க முடியவில்லை என்றார்.

தர்மபுரி மாவட்ட தலைவர் சிற்றரசு, “கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளேன். உலக நாடுகள் போற்றும் தலைவரான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டாடுவதை ஏற்க முடியவில்லை.

எனவே, தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, எனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

என்னைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிற்றரசுவை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளார்கள்.