பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை விமர்சிக்க விரும்பாவிட்டாலும் அவர் நிரபராதி அல்ல, குற்றவாளியே என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

இதையடுத்து தங்கள் வேதனையையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் வாயில் வெள்ளை துணியை கட்டியும், கையில் கருப்பு கொடிகளை ஏந்தியும் இருந்தனர்.

இதுபற்றி மாவட்ட தலைவர் முத்தழகன் கூறும்போது, ‘கொலை செய்யப்பட்டவர்கள் 18 பேர். எனவே 18 ஆயுள் தண்டனை விதித்து இருக்க வேண்டும். ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பதும், தீர்ப்பும் வினோதமாக உள்ளது. எனவே தீர்ப்பை விமர்சிக்க மனமில்லாமலும், எதிர்ப்பை காட்டவும் இப்படி போராடுகிறோம்’ என்றார்.

பெரம்பூர் ரெயில்வே நிலையம் அருகே மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமையிலும், தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும், ஆயிரம் விளக்கில் மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் தலைமையிலும், அடையாறில் மாநில துணை தலைவர் தாமோதரன், மாவட்ட தலைவர் துரை ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்தியமூர்த்தி பவன் முன்பு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையில் நடந்தது.

மேலும் கொரட்டூர், புஷ்பா நகர், துறைமுகம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் அந்த அந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools