ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ‘மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு’ பயணத்தை கோவையில் நேற்று தொடங்கினார். முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக போராடி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையை கூட்டி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர். இதில் கவர்னர் உடனடியாக கையெழுத்திடுவதே முறையாகும். கவர்னர் 4½ மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.
எனவே மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். மக்களின் கருத்துகளை கேட்டு இறுதி போராட்டம் பற்றி முடி வெடுப்பேன். எனது இந்த பயணம் 7 பேர் விடுதலைக்கானது. அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்வரை எனது பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.