பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமின் வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.