பேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு! – மருத்துவர்கள் பரிசோதனை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
உடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12-ந்தேதி பேரறிவாளன் பரோலில் வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
பேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பேரறிவாளனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இன்று காலையிலும் காய்ச்சல் அதிகரித்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் திலீபன் ஜோலார்பேட்டையில் நடத்தி வரும் கிளீனிக்கில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பேரறிவாளனுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தனர்.
மேலும் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரறிவாளனின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.
ரத்த பரிசோதனை முடிவை பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
பேரறிவாளன் அவரது தந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே சுகாதார பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை பேரறிவாளன் வீடு அமைந்துள்ள பகுதியில் முழு சுகாதார பணிகள் செய்யப்பட்டது. அவரது வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடர், நோய் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன.
அந்த பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.