ராம் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் உருவாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கும் ‘பேரன்பு’ எப்படி என்பதை பார்ப்போம்.
மனநலம் குன்றிய மகளை வளர்க்க தந்தை எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார், அவரை சுற்றி நடக்கும் கெட்டவைகளும், நல்லவைகளும் தான் ‘பேரன்பு’ படத்தின் கதை.
துபாயில் வேலை செய்யும் மம்மூட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுக்கு வர, அவரது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, வேறு ஒருவருடன் சென்றுவிடுகிறார். இதனால் தனது மனநலம் குன்றிய மகளை தனி ஆளாக பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகும் மம்மூடி, மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு சென்றாலும், வேறு ரூபத்தில் அங்கேயும் பிரச்சினைகள் வர, பிரச்சினைகளுடனும், மகளுடனும் தொடர்ந்து பயணிப்பவர், தனது மகளை வளர்க்க படும் கஷ்ட்டமும், விடும் கண்ணீரும், தான் இப்படத்தின் கதை.
“என் வாக்கையில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதையை எழுதுகிறேன், இதை படிக்கும் போது நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும்” என்ற மம்மூட்டியின் குரலோடு தொடங்கும் படம், முடியும் போது, அந்த குரல் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை, என்பதை படம் பார்ப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதியச் செய்துவிடுகிறது.
இதுபோன்ற பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் எத்தகைய துயரங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதை, காட்சிகளின் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் நமக்கு இயக்குநர் ராம் புரிய வைத்திருந்தாலும், சில காட்சிகளை வக்கீர குணத்தோடு அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும், அஞ்சலியும், அவரது கணவரும், வீட்டுக்காக மம்முட்டியை ஏமாற்றும் கான்சப்ட் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அதிலும், அஞ்சலி செய்யும் தவறை நியாயப்படுத்தும் வகையில், அவர் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சிப்பதும், அதற்கு மம்மூட்டி, “கடவுள் உங்களுக்கு அழகான குழந்தையை கொடுத்திருக்காரு, ஆனா நீங்க என்னையே ஏமாற்றியிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்” என்று பதில் அளிப்பது ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றாலும், இயக்குநர் ராம் மனதில் இருக்கும் வக்கீரத்தையே காட்டுகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இயக்குநர் ராமின் அத்தியாயங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயற்கை எப்படிப்பட்டவை என்று ராம் எழுத்துக்களால் கூறினாலும், அதை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் உணர வைத்துவிடுகிறது.
மம்மூட்டி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, இந்த படத்திற்காக ரொம்பவே பொருமை காத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது. மம்மூட்டியின் மகளாக நடித்திருக்கும் சாதனாவின் உழைப்பு அபாரம். அவருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுத்தாலும் பத்தாது.
படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே மாதிரியான வேகத்தில் நகரும் திரைக்கதை சிலரை சலிப்படைய வைத்தாலும், பொருமையுடன் படத்தை பார்ப்பவர்களை படம் நிச்சயம் கண்கலங்க வைத்துவிடும்.
மொத்தத்தில், வலியும், வேதனைகளும் நிறைந்த வாழ்க்கை என்றால் என்ன? என்பதை உணர்த்தும் இந்த படம், அதே வாழ்க்கையில் பேரன்பும் இருக்கிறது, என்பதையும் புரிய வைக்கிறது.
-ஜெ.சுகுமார்