Tamilசெய்திகள்

பேரணி கலவரம் எதிரொலி – பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர்

மேற்குவங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.

விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

இதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது’ என கடுமையாக சாடினார். இதையடுத்து பாஜக- மம்தா பானர்ஜிக்கு இடையேயான வார்த்தை மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *