பேய் படங்களை மக்கள் குடும்பத்தோடு ரசிக்கிறார்கள் – பாக்யராஜ்

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா மற்றும் மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அகோரி’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் நடிகர் மைம் கோபி, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், படத்தின் தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான ஆர்.பி.பாலா, இணை தயாரிப்பாளர் சுரேஷ் கே.மேனன், இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் வசந்த், நடிகர்கள் சித்து, வெற்றி, கார்த்திக், ஷரத், உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது,

‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். சில விஷயங்களைப் பற்றி பலர் எவ்வளவு பேசினாலும் நாம் அதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். பேயைப் பற்றி பேசினால் கேட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் எனக்கு ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது.

பேய் பற்றி அப்படி ஒரு படம் எடுத்தால், மக்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். பேய் போல தான் அகோரியும் இருக்கும் என்று நினைத்தேன். அதனுடைய ஒலி கூட எதிர்மறையாக இருந்தது. அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.

அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். நாம் சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். மக்கள் அதை ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ‘அகோரி’என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் மக்கள் நம்பும் வகையில் லாஜிக்குடன் சொல்ல வேண்டும். அப்படி சொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools