பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் பலி – குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ரசிகர்கள் அவர்களின் நற்பணி மன்றம் சார்பாக பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இரத்ததானம், அன்னதானம், மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்த நடிகர்களுக்கு போஸ்டர்களும், பேனர்களும் வைத்து கொண்டாடுகின்றனர்.
நடிகர் சூர்யா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரசிகர்கள் சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இறந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சூர்யா ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.