Tamilவிளையாட்டு

பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்துவிட்டால் தொடரை கைப்பற்றி விடலாம் – அஸ்வின் கருத்து

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. அந்த ஆட்டம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

அதன்பின் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி ஐந்து போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. கடந்த சீசனில் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் தொடரை 1-4 என இழந்தது.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் சாதிக்க வேண்டும் என்றால் விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒட்டிக்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘அவர்களுடைய ஆடுகளத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அவர்களுடைய கண்டிசனில் அவர்கள் எவ்வாறு சிறந்தவர்கள் என்பதை காண்பிப்பார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். கண்டிசன் இங்கிலாந்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் தற்போதுள்ள இந்திய அணிக்கு கிடைத்த அனுபவம் அணியை நல்ல நிலையில் வைத்திருக்கனும். விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்களும் இணைந்து ரன்கள் குவித்துவிட்டால், தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு உள்ளது.

400 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளேன். வலது கை பேட்ஸ்மேன்ளுக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளேன். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இணையாக அவர்களையும் வீழ்த்தியுள்ளேன். சிறந்த வீரர்களுக்கு எதிரான பந்து வீச்சு ஐடியா, மகிழ்ச்சியான சவாலாக இருக்கும். முதல் பேட்ஸ்மேன் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரைக்கும் ஒட்டுமொத்தமாக நல்ல விதத்தில் தயாராகி விடுவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.