பேட்ஸ்மேன்கள் தரவரிசை – சாதனைகளை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தான் கேப்டனும் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் உலகின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார்.
மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார். பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டாப் 10-ல் இருக்கிறார். இஷான் கிஷன் 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவர் 2 முறை நான்கு சதங்கள் தொடர்ச்சியாக அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் பேட்டிங்கிலும் சாதனை படைக்க பாபர் அசாம் இலக்கு வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதில் திருப்தி அடையாத அசாம், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆவதற்கு இப்போது தனது பார்வையை திருப்பியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அசாம் தற்போது 815 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.