X

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்காக சிறப்பு காட்சிகள்!

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. இரண்டு படங்களுமே நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்றும் விறுவிறுப்பாக நடந்தன.

நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளிவைத்துவிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.