Tamilவிளையாட்டு

பேட்டிங், பீல்டிங்கில் கவனம் செலுத்தும் ரிஷப் பண்ட் – அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் முழு உடல் தகுதி பெற்றார். ஆனாலும் அவர் உடனடியாக கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கேப்டனாக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி கேப்டன் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ரிஷப் பண்ட் விளையாடும் பட்சத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் பலம்பெறும். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அடுத்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

ஏலப் பட்டியலில் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 25 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர். அசோசியேட் நாடுகளான நமீபியாவில் இருந்து டேவிட் வைஸ், நெதர்லாந்தில் இருந்து மீக்கெரன் ஆகியோரும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட், ஸ்டார்க் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.