ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 21 ரன் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது.
தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்தில் 92 ரன்னும், ரோமன் பாவெல் 35 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணிகள் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது.
அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 62 ரன்னும், மார்கிராம் 42 ரன்னும் எடுத்தனர்.
வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது: இந்த போட்டி ஒரு பேட்டிங் குழுவாக எங்களுக்கு பொருத்தமான ஆட்டமாக அமைந்தது என்று நினைக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிரணி சேசிங்கில் நிகோலஸ் பூரன் பேட்டிங் செய்யும்போது நான் அமைதியாக இருந்தேன். இந்த அதிக ரன் சேசிங்களில் ரன் ரேட்டை விட ஒரு ஓவரில் 8 முதல் 12 ரன் எடுக்க வேண்டியதிருக்கும். அதை 20வது ஓவர் வரை அடிப்பது கடினம். அதனால் பந்துவீச்சாளர்களிடம், அமைதியாக இருப்போம், முடிந்தால் அடிக்க முயற்சி செய்யட்டும் என்று கூறினேன்.
டேவிட் வார்னர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம், டெல்லி அணிக்காக நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று ரோவன் பாவெல் தொடர்ந்து ஆட்டங்களில் ரன் எடுக்கவில்லை. அவருக்கு நாங்கள் ஆதரவளித்தோம். தற்போது அவர் அபாரமாக விளையாடி வருகிறார். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் நூறு சதவீதம் திறமையை வழங்குகிறோம்.
நான் புல்டாஸ் பந்தில் அவுட் ஆனேன். இது விளையாட்டின் ஒரு பகுதி. அடுத்த தடவை சிக்சர் அடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, அவர்கள் (டெல்லி) அற்புதமான ஸ்கோரை பெற்றனர். ஒரு பேட்டிங் குழுவாக உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். எங்களிடம் நிறைய நம்பிக்கை இருந்தது. சிறிய மைதானம் மற்றும் கொஞ்சம் பணி தாக்கம் இருந்த நிலையில் நாங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் முடிவு மாறி இருக்கலாம். முதல் பாதியில் நெருக்கடிக்கு உள்ளானோம். அவர்களை அதிக ரன் எடுக்க விட்டுவிட்டோம் என்றார்.
டெல்லி அணி 5வது வெற்றியை (10 ஆட்டம்) பெற்றது. ஐதராபாத் 5வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது.