X

பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள் – அமெரிக்கா, ஈரானுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்துவருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசி கொன்றது.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

வாடிகனில் பேசிய அவர், மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் ஈடுபடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.