பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் யூரோ கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் – ஸ்வீடன் அணிகள் மோதின. ஆட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பெல்ஜியம் – ஸ்வீடன் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், பிரசெல்ஸில் நடந்த இந்த கோழைத்தனமான தாக்குதலின் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
பிரசெல்ஸ் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பிரசெல்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், இந்த தாக்குதலில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.