Tamilவிளையாட்டு

பெற்றோருடன் எந்தவித பிரச்சினையும் இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் அவர் லண்டன் சென்றதாகவும், ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி திருப்தி அளிக்காததால், ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமில் இருந்து பாதியில் விலகி விட்டதாகவும், குறைந்தது 2 மாதங்கள் கழித்து தான் தாயகம் திரும்புவேன் என்று அவர் கூறியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு பயணத்தின் போது தனது தந்தை பி.வி.ரமணா அல்லது தாயார் விஜயா ஆகியோரில் ஒருவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்ட சிந்து இந்த முறை தனியாக சென்றிருப்பதற்கு இது போன்ற விவகாரங்களே காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் 25 வயதான பி.வி.சிந்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு லண்டன் வந்தேன். அதுவும் எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் எந்த விரிசலோ, பிரச்சினையோ இல்லை. எனக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த எனது பெற்றோருடன் எனக்கு ஏன் பிரச்சினை வரப்போகிறது? நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பம். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். தினமும் எனது குடும்பத்தினருடன் உரையாடுகிறேன். இதே போல் எனது பயிற்சியாளர் கோபிசந்துடனோ அல்லது அவரது அகாடமியில் உள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்துவதிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது.

இவ்வாறு சிந்து கூறியுள்ளார்.

இதற்கிடையே சிந்துவின் தந்தை ரமணா அளித்த பேட்டியில், ‘நாங்கள் சிந்துவுடன் 2 மாதங்கள் தங்கியிருக்க முடியாது. அதனால் தான் அவர் பயற்சிக்காக தனியாக லண்டன் சென்றிருக்கிறார். தேசிய முகாமில் சிந்துவுக்குரிய பயிற்சி முறையாக நடக்கவில்லை. அது மட்டுமின்றி 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் பயிற்சி பெற சரியான பார்ட்னரை வழங்கவில்லை. இங்கு தரமான பயிற்சி அவருக்கு கிடைக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.