பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியால் கடந்த 6-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் கடந்த 15-ந்தேதி நடைபெற்றது.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் இருப்பின் 16-ந்தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5 ஆயிரத்து 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.