Tamilவிளையாட்டு

பெரிய அளவில் ரன்களை விரைவில் குவிப்பேன் – ரோகித் சர்மா பேட்டி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ராய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சால் 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது.

பிலிப்ஸ் அதிகபட்சமாக 36 ரன்னும், சாண்ட்னெர் 27 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 18 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 50 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 40 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- கடந்த 5 ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். உள்நாட்டில் சாதிக்கும் அளவுக்கு அவர்களின் பந்து வீச்சு திறன் இருக்கிறது.

நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன். அதிக அளவில் ரன்கள் குவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம் நான் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அதுகுறித்து நான் அதிகமாக கவலைப்படுவதில்லை.

நான் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான பேட்டிங் திறனையே வெளிப்படுத்துகிறேன். பெரிய அளவில் ரன்களை விரைவில் குவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்ற ரோகித் சர்மா கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.