சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் 2.15 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர். இதையொட்டி பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.