பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் – ரஜினிகாந்த் அறிவிப்பு
துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரஜினி மீது முதலில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பிறகு சென்னை திருவல்லிக்கேணி, சேலம், ஈரோடு, மேட்டூர், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு 23-ந்தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடத்த பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரஜினி வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போயஸ்கார்டன் பகுதியில் எப்போதுமே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பார்கள்.
ஜெயலலிதா வீடு அங்கு இருப்பதால் 24 மணி நேரமும் போலீஸ் பணியில் இருப்பார்கள்.
ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரது வீட்டுக்கு செல்லும் சாலைகளில் போலீசார் உஷார்படுத்தப்படுள்ளனர்.
இதற்கிடையே பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
அதில், ரஜினிகாந்த் பெரியார் குறித்து தவறான கருத்துகளை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.