Tamilசெய்திகள்

பெரியபாளையும் அருகே ரேஷன் கடையில் அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 ரேசன் கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த ரேசன் கடைகளில் வண்ணம் பூசுதல், உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை தூய்மையாக பராமரித்தல், அறிவிப்பு பலகைகளை புதிதாக வைத்தல், வேலை நேரங்களில் விற்பனை எந்திரங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்தல், மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களை கொண்டதாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் ரேசன் கடை மற்றும் கடம்பத்தூரில் உள்ள ரேசன் கடை உள்ளிட்ட 5 கடைகளில் இதேபோல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாமரைப்பாக்கத்தில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா? சரியான எடையுடன் அனைத்து பொருட்களும் வழங்குகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான குறைகளை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, திருவள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளர்கள் கருணாகரன், காத்தவராயன், சார்பதிவாளர்கள் விஜயவேலன், விஜய்சரவணன், ஒன்றிய மேலாளர் ஆடல் அரசன், தாமரைப் பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாஸ்கரன், சிற்றெழுத்தர் பரிமளம், விற்பனையாளர் ஆறுமுகம் உடன் இருந்தனர்.