பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு பின்புறமுள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. 5 மீட்டர் நீளமுடைய இந்த கல் மரமானது சுண்ணாம்பு பாறை ஒன்றில் புதைந்த நிலையில் உள்ளது. அதன் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிகிறது. மேலும் ஓடையில் சிறுசிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே இது போன்ற கல்மரம் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் உள்ளதை கடந்த 1940-ம் ஆண்டில் எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியின் சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்மரமும், சாத்தனூர் கல்மரத்தை போன்றதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆலத்தூர் வட்டத்தில் மட்டுமே காணக்கிடைக்கப்பெற்று வந்த இந்த வகை கல்மரத்துண்டுகள் தற்போது குன்னம் கிராமத்தில், முதன்முறையாக ஓடையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் செயல்பட்டாளர் ரமேஷ் கருப்பையா தெரிவித்தார்.
இதேபோல் குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.