X

பெண்ணியம் என்ற வட்டத்திற்குள் சிக்க விரும்பவில்லை – நடிகை அமலா பால்

அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான். ‘ஆடை’ ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த ‘ஆடை’ பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம்.

இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த வி‌ஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த கருத்துடன் அவர்களால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.

சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை படத்தில் கூறியிருக்கிறோம், இப்படத்தை பற்றிய செய்திகளில் தவறான தலைப்புகளை பதிவிட்டு வரும் தந்திரம் நடந்துக் கொண்டிருக்கிறது. இது நெறிமுறையற்ற வி‌ஷயம். நாங்கள் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை. நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.

இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்’. இவ்வாறு அமலாபால் கூறினார்.