பெண்கள் புரோ லீக் ஹாக்கி – இன்று இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதல்
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா அணி (42 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது. இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க அணி கடைசி இடத்தில் இருக்கிறது.
ஜூலை 1-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இந்திய அணி இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.