பெண்கள் பிரீமியர் லீக்கில் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆர்சிபி வீராங்கனைகள் விரைவாக ரன்கள் சேர்க்க திணறினர். தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா (10), சோபி டிவைன் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த எலிஸ் பெர்ரி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டத்தால் ஆர்சிபி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி வீராங்கனைகளும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். தொடக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டியா 27 பந்தில் 19 ரன்களும், ஹெய்லே மேத்யூஸ் 14 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 பந்தில் 33 ரன்களும், அமெலியா கெர் 25 பந்தில் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.