Tamilசெய்திகள்

பெண்கள் திமுக-வை புறக்கணிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் பேச்சு

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று அரியலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த கூட்டணி சமூகநீதி அடிப்படையிலேயே சேர்ந்து இருக்கின்றோம். நம் பக்கம் இருப்பது 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்-அமைச்சராக வந்திருக்கிறார். அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும்.

தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, தி.மு.க.வின் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய மந்திரி, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சரை பற்றி கொச்சையாக பேசியுள்ளார். முதல்-அமைச்சரின் தாயைப் பற்றி பேசியுள்ளார். ஒரு பெண்ணைப் பற்றிப் அதுவும் ஒரு தாயைப் பற்றி கொச்சையாக பேசும் நபர், இதை நிச்சயம் மன்னிக்க முடியாது.

அந்த தாயை பற்றி அவ்வளவு கொச்சையாக பச்சையாய் பேசிய ராசாவை அவங்க கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஸ்டாலினுக்கு பெண்களை பற்றியோ, தாயை பற்றியோ எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் கிடையாது. இதுவே நம்ம கட்சியில யாராவது பேசி இருந்தா இந்நேரம் அடிப்படை உறுப்பினர் மட்டுமில்ல உதைத்து அனுப்பி இருப்போம்.

தாயைப் பற்றி கொச்சையாக பேசுபவன் மனிதனே கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்கள், பெண்கள், இது ஏதோ இந்த தொகுதி பிரசாரம் கிடையாது இது தமிழ்நாட்டுப் பெண்களின் மானப் பிரச்சினை. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களும் அத்தனை பெண்களும், தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும்.

தி.மு.க. பெண் விரோத கட்சி. பெண்களை அவமதிக்கும் கட்சி தி.மு.க. ஒரு பெண்கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது. காரணம் அந்தக் கட்சி அப்படிப்பட்டது. அந்த தலைவர் அப்படிப்பட்டவர். இதுவே நான் கேட்கிறேன், முன்பு சினிமா நடிகர் ராதாரவி தி.மு.க.வில் இருந்தார். அப்போ அவர் நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசினார்.

உடனடியாக ஸ்டாலின் என்ன செய்தார் என்றால் ராதாரவியை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். தற்போது முதல்-அமைச்சரின் தாயை பற்றி கொச்சையாக பேசும் ஆ.ராசா மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நயன்தாராவைப் பற்றி தவறாக பேசியபோது கட்சியை விட்டு நீக்கிய நீங்கள் ஏன் ஒரு தாயைப் பற்றி தவறாக பேசிய அந்த ராசாவை ஏன் இன்னும் விட்டு வைத்துள்ளீர்கள்? ஏன் நீங்கள் கட்சியை விட்டு நீக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.

கேட்டால், ஸ்டாலின், ராசா பதமாக பேசு ராசா, பார்த்து பத்திரமாக பேசு ராசா, இது தேர்தல் ராசா, அப்படின்னு சொல்லி இருக்காராம். இதை பத்திரிகையில் ஸ்டாலின் வந்து சொல்லிட்டாராம் ராசாவுக்கு. அடப் போங்கய்யா. என்ன சொல்றீங்க இதுதான் நீங்கள் பெண்களை மதிக்கிறதா? நிச்சயமாக சொல்கிறேன் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. ஏனென்றால் தி.மு.க.வின் கூட்டணி அப்படிப்பட்ட கூட்டணி.

ஆனால் இப்போது நடக்கின்ற ஆட்சியில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம். எல்லா பாதுகாப்பும் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.