பெண்கள் டி20 உலக கோப்பை – 4வது வெற்றியை ருசித்த இந்தியா

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த உற்சாகத்துடன் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெயங்கனி 33 ரன்கள் எடுத்தார். தில்ஹரி அவுட் ஆகாமல் 25 ரன்கள் சேர்த்திருந்தார். இந்தியா தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. துவக்க வீராங்கனை மந்தனா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் 15 ரன்களில் வெளியேறினார்.

ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இளம் வீராங்கனை சபாலி வர்மா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 47 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

அதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராதா யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news