பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் சல்மா கதுன் தலைமையிலான வங்காளதேச அணியை பெர்த்தில் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ள இந்திய அணி, வங்காளதேசத்துக்கு எதிராகவும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீராங்கனை வேதாகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் மெத்தனமாக இருந்து விடாமல், வங்காளதேசத்துக்கு எதிராகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது போதுமான ஸ்கோர் குவிக்க வேண்டும். அப்போது தான் எங்களது பந்து வீச்சாளர்களின் சிரமத்தை குறைக்க முடியும். இதை உறுதி செய்யும் வகையில் விளையாட வேண்டும்.’என்றார்.
வங்காளதேச கேப்டன் சல்மா கதுன் கூறுகையில், ‘இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின் முடிவு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயாராவதில் கவனம் செலுத்துகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் எங்களது வீராங்கனைகள் 100 சதவீத பங்களிப்பை அளித்தனர். இதே போல் இந்த உலக கோப்பை தொடரை நல்லவிதமாக தொடங்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் இந்தியாவும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக இதே மைதானத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.