X

பெண்கள் சேலஞ்ச் டி20 – மித்தாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் அணிகள் இன்று மோதல்

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இன்று (புதன்கிழமை) முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சார்ஜாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. வெலோசிட்டி அணியில் 16 வயதான நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு பலமாகும். இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் அங்கம் வகிக்கிறார்கள். பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் இந்த முறை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வரவில்லை.

கொரோனா பரவலால் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத இந்திய வீராங்கனைகளின் உடல்தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது, ஆட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிரைல்பிளாசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, டியாந்த்ரா டோட்டின் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.