X

பெண்கள் கிரிக்கெட் – நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் இந்தியா தோற்று தொடரை இழந்தது. இரு அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை குயின்ஸ்டவுனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்தது. அமெலிகெர் 66 ரன்னும், சோபியா, தேவினே 34 ரன்னும், லூரன் டவுன், ஜென்சென் தலா 30 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் தீப்தி சர்மா, கெய்க்வாட், ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தொடக்க வீராங்கனை ‌ஷபெலி வர்மா 9 ரன்னிலும், தீப்தி சர்மா 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி சென்றது. மந்தானா 71 ரன்னிலும், ஹர்மன் ப்ரீத் கவுர் 63 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கேப்டன் மிதாலி ராஜ் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார்.

இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. மிதாலி ராஜ் 57 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.