பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் – இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று கடைசி போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 75 ரன்கள் விளாசினார். ஷபாலி சர்மா 49 ரன்கள், பூஜா வஸ்திராகர் 56 ரன்கள் (நாட் அவுட்), யாஸ்திகா பாட்டியா 30 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து ஆடிய இலங்கை அணி 47.3 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில், அதிகபட்சமாக நிலாக்சி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சமாரி அட்டபட்டு 44 ரன்களும், ஹாசினி பெரேரா 39 ரன்களும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் சிறந்த வீராங்கனை மற்றும் இந்த தொடரின் சிறந்த வீராங்கனை என இரண்டு பரிசுகளையும் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச்சென்றார்.