நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணி களமிறங்கி ஆடியது.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் எஸ் கேம்பல்லே 66 ரன்கள் குவித்தார். நேசன் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக டாமி பியூமண்ட் 46 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாமிலியா கானல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 66 ரன்கள் எடுத்த எஸ் கேம்பல்லே ஆட்ட வீராங்கனை விருதை தட்டிச்சென்றார்.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாத்தில் நியூசிலாந்தை வீத்தி த்ரில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியே வென்றது குறிப்பிடத்தக்கது.