Tamilவிளையாட்டு

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து – பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும்.

இதில் 5-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆக்லாந்தில் நடந்த (ஜி பிரிவு) ஆட்டம் ஒன்றில் இத்தாலி-அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில், மாற்று வீராங்கனையாக களம் கண்ட இத்தாலியின் கிறிஸ்டினா ஜிரெலி 87-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது. முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

அர்ஜென்டினா ஆண்கள் அணி உலகக் கோப்பையை வென்று இருந்தாலும், பெண்கள் அணியை பொறுத்தமட்டில் இன்னும் கொஞ்சம் கத்துக்குட்டி தான். 4-வது முறையாக உலகக் கோப்பையில் ஆடும் அர்ஜென்டினா பெண்கள் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட சுவைத்தது கிடையாது என்பது நினைவுகூரத்தக்கது.

மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (‘எச்’ பிரிவு) 2 முறை சாம்பியனான ஜெர்மனி எதிர்பார்த்தது போல் 6-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான மொராக்கோவை ஊதித்தள்ளியது. பந்தை அதிக நேரம் (75 சதவீதம்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி தரப்பில் கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் 2 கோலும் (11-வது, 39-வது நிமிடம்), கிலாரா புல் (46-வது நிமிடம்), லீ ஸ்சுலெர் (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். மேலும் எதிரணியினரின் கவனக்குறைவு காரணமாக இரு சுயகோலும் கிடைத்தன.

அடிலெய்டில் நடந்த (‘எப்’ பிரிவு) இன்னொரு ஆட்டத்தில் வலுவாக கோலோச்சிய பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பனாமாவை பந்தாடியது. பிரேசில் அணியில் ஆரிடினா போர்ஜெஸ் (19-வது, 39-வது, 70-வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்த முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையை ஆரிடினா போர்ஜெஸ் பெற்றார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா-தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் மோதுகின்றன.