Tamilசெய்திகள்

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி ஸ்ரீநிதி-பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் மகன் கவுசிக்தேவ் ஆகியோரது திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு அவர் பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒரு பயணத்தை நடத்தினேன். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மனுக்களை பெற்றேன். அந்த பெட்டியை மக்கள் முன்பே பூட்டி. ஆட்சிக்கு வந்து 100 நாளில் அதனை தீர்த்து வைப்பேன் என உறுதி தந்தேன். அது போன்று நாம் ஆட்சிக்கு வந்தோம். அதன்பின்பு பெட்டிகள் கோட்டைக்கு வந்தது. அதற்கு என்று ஒரு துறை உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரி மற்றும் குழு நியமிக்கப்பட்டது. உடனே அந்த பெட்டிகள் பிரிக்கப்பட்டு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் எந்த பணிகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு முடித்தோம். ஆக அப்படி வழங்கப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன். இதற்கு என்று தனி துறை, தனி அதிகாரி என வைத்திருக்கிறோம். அடிக்கடி நான் அங்கு சென்று ஆய்வு செய்து, எவ்வளவு மனுக்கள் வந்துள்ளது. எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்பேன். 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். கடந்த வாரமும் ஆய்வுக்காக அங்கு சென்றேன். 200 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் போன் செய்து உங்கள் காரியம் நிறைவேறி விட்டதா என கேட்கின்றனர். நான் காரியம் கிடைத்த 4 பேரிடம் பேசினேன். அவர்கள் நன்றி சொன்னார்கள்.

அப்போது ஒருவரிடம் பேசினேன். நான் 10 ஆண்டுகளாக இதற்காக அலைந்தேன். கடந்த கால ஆட்சியில் அது நடக்கவில்லை. உங்கள் ஆட்சி வந்த 10 நாளில் எனது காரியம் முடிந்து விட்டது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு நன்றி என்று கூறியதோடு, முதல்-அமைச்சரான நீங்களே பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என பூரிப்போடு பேசினார். அடுத்த தினம் அவரிடம் பலரும் சிறப்பு பேட்டி எடுத்தனர். அதை நானும் பார்த்தேன். அப்போது அவர், 10 வருடமாக முடியாத காரியத்தை 10 நாளில் இந்த ஆட்சி முடித்து தந்து விட்டது. மேலும் அது முடிந்து விட்டதா என முதல்-அமைச்சரே என்னிடம் கேட்டார் என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு விஷயம் இருக்கிறது என்ற அவர், நான் முதல்-அமைச்சரிடம் கூட சொல்லவில்லை. அதை கேட்டிருந்தால் அவர் ஆச்சரியப்பட்டிருப்பார். அதை இப்போது சொல்கிறேன் என்று சொன்னார். நான் அவரோடு பிரசிடன்சி கல்லூரியில் ஒன்றாக படித்தேன். அதுவும் அவரது வகுப்பு மாணவன் நான் என்றார். இதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சொன்னதை எல்லாம் செய்யும் ஆட்சி தான் தி.மு.க. இப்போது கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சினைகளை முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு தெரிவித்தால் அதனையும் தீர்த்து வைக்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்து உள்ளோம். அது எடப்பாடி தொகுதியாகவே இருந்தாலும் அந்த பிரச்சினையையும் தீர்த்து வைப்போம். இதுதான் தி.மு.க. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

சட்டமன்றத்தில் என்னென்ன உறுதி மொழி, வாக்குறுதி கொடுத்தோமோ அதை எல்லாம் நிறைவேற்றுவது தான் தி.மு.க ஆட்சி. ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறார். நாங்கள் நிறைவேற்றியதற்கான எடுத்துக்காட்டுகளை தான் இப்போது சொல்லியிருக்கிறேன். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டேன். அதன்மூலம் பெண்கள் பயன்பெற்று உள்ளனர். இதுதவிர பால் விலை குறைப்பு என பலவற்றையும் நிறைவேற்றி உள்ளோம்.

வருகிற 5-ந்தேதி டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஸ்மார்ட் கிளாஸ் என்ற திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். டெல்லி சென்றபோது நான் அதனைபார்த்து விட்டு வந்தேன். அதனை தொடங்கி வைப்பதற்காக அவர் வர வேண்டும் என கேட்டேன். அவரும் அதற்காக தமிழகம் வருகிறார். அதனை தொடங்கி வைக்க உள்ள அதே வேளையில் தான் அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுப்போம் என உறுதி அளித்தோம். அந்த திட்டத்தையும் அன்றைய தினம் தொடங்க போகிறோம். பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் அந்த தொகையானது வழங்கப்படும். நான் கலைஞரின் மகன். சொன்னதை செய்வோம். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.