பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித் தொகை – ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘தாய்மடி’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை சித்தூரில் நடந்த விழாவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாயாருக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் எந்தவித இடையூறும் இன்றி கல்வி கற்க வசதியாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு தாய்மடி திட்டத்தில் கல்வி உதவித்தொகை கிடைக்கும். அந்த பணம் தாயாரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர். இதற்காக அரசு ரூ.6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க மேலும் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அன்று-இன்று என்ற திட்டத்தில் 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்படும். முதல் கட்டமாக 15 ஆயிரத்து 715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளன. கழிப்பறை, சுத்தமான குடிநீர், நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுச்சுவர், தரமான கட்டிடம், பெயிண்டிங் ஆகிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செய்யப்படும்.

அடுத்த ஆண்டில் பள்ளி திறக்கப்படும் நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. இதில் 3 செட் சீருடை, புத்தகம், காலணி, பெல்ட், புத்தக பை ஆகியவை இருக்கும்.

வருகிற கல்வி ஆண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டு ஆங்கில வழிக்கல்வி திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புகளுக்கு உயர்த்தப்பட உள்ளது. 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சி வழங்கப்படும்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சிபெறும் விதமாக கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news