சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில், 99 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, 100 லிட்டர் தேவை என்றால், 99 லிட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரத்துக்கு ஏற்ப இங்கு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அவற்றின் விலை உயர்வது, சாதாரண மக்களுக்கு நிச்சயமாக பெரிய சுமைதான்.
ஆனால், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மட்டும் வரி விதிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக மத்திய அரசு விதிக்கிறது. மாநில அரசுகள்தான், மதிப்பு கூட்டு வரி விதிக்கின்றன. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் இணைந்து கையாள வேண்டும்.
பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் சொத்துகளை கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அந்த கட்சியின் மரபணுவிலேயே ‘கொள்ளை’ இருக்கிறது. எனவே, கொள்ளையை தவிர வேறு எதை பற்றியும் நினைப்பது இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்கம் என எல்லாவற்றிலும் கொள்ளை நடந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தும், மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.